சாலையில் நடனம் ஆடியதில் தகராறு: வடமாநில வாலிபர் கொலை: பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

வேளச்சேரி: சாலையில் நடனம் ஆடியதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை அடித்து கொன்ற பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் மண்டல் (29). வேளச்சேரி, விஜிபி செல்வா நகரில் சக தொழிலாளர்களுடன் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தார். இவர், கடந்த 27ம் தேதி மாலை தொழிலாளர்களுடன் அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, தரமணி பகுதியை சேர்ந்த கோகுல் (21), பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த பி.காம் படித்து வரும் கல்லூரி மாணவன் அரிகரன் (18) உள்பட பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர், சாலையில் நடனம்  ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கால் ரமேஷ் மண்டல் மீது பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், பையில் வைத்திருந்த முருங்கைக்காயை எடுத்து, டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளார். அப்போது, இரு தரப்பினர் இடையே, அடிதடி ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த கோகுலகிருஷ்ணன் உள்பட 9 பேரும் ரமேஷ் மண்டலை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த  ரமேஷ் மண்டலை சக தொழிலாளர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை கோகுலகிருஷ்ணன் உள்பட 9 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: