கோவை, தேனி, குமரியில் 2000 மெகா வாட் திறனில் நீரேற்று மின் நிலையங்கள்; மின்வாரியம் திட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் 2000 மெகாவாட் திறனில் கோவை, தேனி, கன்னியாகுமரியில் நீர்மின் நிலையங்கள் அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் 11 இடங்களில் 7,500 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என  சட்டப் பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்த மின்வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக கோவை ஆழியாறில் 1000 மெகாவாட், கன்னியாகுமரி கோதையாறு மற்றும் தேனி ஆழியாறில் தலா 500 மெகாவாட் திறனில் புதிய நீரேற்று மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மூன்று இடங்களில் மின் நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு மின் நிலையம் அமைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த நீர்மின் நிலையங்கள் பொது, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மின் நிலையம் அமைத்து மின் உற்பத்தி செய்யும். அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கப்படும். ஒப்பந்த காலம் முடிந்த பின் மின் நிலையம் மின்வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதியில் உள்ள அணையில் சேர்த்து வைக்கப்படும். பின்னர், மீண்டும் அந்த தண்ணீர் பைப் மூலம் உயரமான பகுதியில் உள்ள அணைக்கு கொண்டு செல்லப்பட்டு மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: