நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டியில் கே.எஸ்.டி. சரவணன் என்பவர் முதல் பரிசை பெற்றார்

நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் கே.எஸ்.டி. சரவணன்(23) என்பவர் முதல் பரிசை பெற்றார். நாமக்கல் - மோகனூர் சாலையில், சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் காலித் என்ற பிரபல பிரியாணி கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வியாழக்கிழமை அதிகம் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி நடைபெற்றது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்த நிலையில், 35 பேர் மட்டும் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

பிற்பகல் 2.15 முதல் 2.35 வரை போட்டி நடைபெற்றது. அதிக அளவில் பிரியாணி சாப்பிட்ட நாமக்கல்லை சேர்ந்த, நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாளராக உள்ள சரவணன் என்பவர் முதலிடம் பிடித்து(மூன்றரை தட்டுக்கள் சாப்பிட்டு) ரூ.5,001 ரொக்க பரிசை வென்றார். இரண்டாம் இடத்தை ஜீவா, மூன்றாம் இடத்தை கவின், நான்காம் இடத்தை சதீஷ்குமார் ஆகியோர் பிடித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை காலித் பிரியாணி கடை உரிமையாளர், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: