*சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
குன்னூர் : ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வந்த டால்பின்நோஸ் சுற்றுலா தளத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட சீசனுக்காக இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் வனத்துறைக்கு சொந்தமான டால்பின் நோஸ் என்னும் காட்சி முனை உள்ளது.அழகான தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்கு காட்சிகள் மற்றும் அருவிகள் அதிக அளவில் காணப்படும் இந்த காட்சி முனையிலிருந்து எதிரே உள்ள கேத்தரின் நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீரை காணலாம். டால்பின் நோஸ் சுற்றுலாத்தலம் நீலகிரியில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது வனத்துறை மற்றும் பர்லியாறு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாளுக்கு நாள் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய கழிப்பறை உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் தமிழக வனத்துறை சார்பில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் டால்பின் நோஸ் பகுதியில் கழிப்பறை, அலங்கார விளக்குகள், நடைபாதை வசதி, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு உபகரணங்கள் உட்பட பல்வேறு வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்பணிகளை மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டதோடு, 2ம் கட்ட சீசன் வரவுள்ள நிலையில் பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது சீசன் துவங்கியதால், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இன்று (22ம் தேதி) முதல் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது.
