*தேர்வு மையத்தில் எஸ்பி ஆய்வு
ஆம்பூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. 2 மையங்களில் நடந்த இத்தேர்வை 1,559 பேர் எழுதினர். தேர்வு மையத்தில் எஸ்பி சியாமளாதேவி ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசின் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 2025ம் ஆண்டில் எஸ்ஐ பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,578 ஆண்கள், 519 பெண்கள் என மொத்தம் 2,097 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பத்திருந்தனர். இதையொட்டி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் கல்லூரி என 2 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
வாணியம்பாடி கல்லூரியில் நடந்த முதன்மை எழுத்துத்தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதித் தேர்வில் ஆம்பூர், வாணியம்பாடி, உம்ராபாத், மாதனூர், ஆலங்காயம், உதயேந்திரம் உட்பட பல்வேறு பகுதிகளை சார்ந்த பெண்கள் உட்பட 739 பேர் தேர்வு எழுதினர்.
258 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.முன்னதாக தேர்வையொட்டி எஸ்பி சியாமளாதேவி தலைமையில் 120க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை 8 மணி துவங்கி தேர்வர்கள் உரிய நுழைவுச்சீட்டு, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் சரிபார்க்கப்பட்டு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மதிய தேர்வை ஒட்டி கல்லூரி வளாகத்தில் குறைந்த கட்டண உணவக வசதி அமைக்கப்பட்ட இடத்தில் தேர்வர்கள் உணவு உட்கொண்டனர்.அதேபோல், திருப்பத்தூர் கல்லூரியில் 820 பேர் தேர்வு எழுதினர். 280 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
