நீதித்துறை குறித்து கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி, சட்ட அமைச்சருக்கு எதிராக வழக்கு: மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

மும்பை: நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறி, துணை ஜனாதிபதி மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சருக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியரசு துணை தலைவர் ஜகதீப் தங்கர், கடந்த சில வாரங்களுக்கு முன்  நீதித்துறை குறித்து வெளியிட்ட கருத்தில், கடந்த 1973ம் ஆண்டு வெளியான  கேவவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,  ‘அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு; ஆனால் அதன்  அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால் இந்த  தீர்ப்பு குறித்து துணை குடியரசு தலைவர் கேள்வி எழுப்பினார். இவரது கருத்து  பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதேபோல் கடந்தாண்டு நவம்பரில் கருத்து  தெரிவித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலீஜியம் முறை மூலம் உச்ச  நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது பல்வேறு கேள்விகளை  எழுப்பினார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவருகிறார். சட்ட  அமைச்சரின் இந்த கருத்து குறித்தும், பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகள்  கிளம்பின. இந்நிலையில் நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவதாக கூறி, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தங்கர் மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு எதிராக மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது.  அதில், ‘துணை குடியரசு தலைவர் மற்றும் ஒன்றிய சட்ட அமைச்சர் ஆகியோரின் செயல்பாடுகள் மற்றும் கருத்துகள் இந்திய அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையில்லாத நிலையை காட்டுவது போல் உள்ளது. எனவே அவர்கள் இருவரும் தங்களது அரசியலமைப்பு பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related Stories: