வேளச்சேரி அருகே ரவுடியை சரமாரி வெட்டிக் கொல்ல முயற்சி: 5 பேர் கும்பலுக்கு வலை

வேளச்சேரி: வேளச்சேரி அருகே நேற்று டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த ரவுடியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் சரமாரி வெட்டி கொலை செய்ய முயற்சித்தது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி அருகே பெரும்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ரவுடி சிவா (எ) ஸ்பீடு சிவா. இவர்மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 4 கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று மாலை மேடவாக்கம், செம்மொழி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அங்கு அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ரவுடி ஸ்பீடு சிவாவை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரி வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டது. இதில் ரவுடி ஸ்பீடு சிவாவின் தலை உள்பட பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்ததும் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், ரவுடி ஸ்பீடு சிவாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி ஸ்பீடு சிவாவை முன்விரோத தகராறில் மர்ம கும்பல் வெட்டியதா அல்லது கஞ்சா தொழில் போட்டி தகராறில் வெட்டப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: