கருத்துரிமையை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் தொடர்பாக, இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி நிறுவனம், இந்தியா மோடிக்கான கேள்விகள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது. இதை இந்தியாவில் திரையிடக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் வழங்கிய, கருத்து உரிமையை பறிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம், பிபிசி ஆவணப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்போம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியுவின் சார்பில், அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் சந்திப்பு முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வில்லிவாக்கம் பகுதி செயலாளர் யூஜன் தலைமை தாங்கினார். சென்னை மாநகராட்சி 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், பிபிசி ஆவணப்படத்திற்கான க்யூஆர் கோடு அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: