பர்னிச்சர் குடோனில் தீ விபத்து: 4 மணி நேரம் போராடி அணைப்பு

திருவொற்றியூர்:  மாதவரத்தில், பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கொடுங்கையூரை சேர்ந்தவர் நிருபன் (48), பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மணலி, மாதவரம், வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் பர்னிச்சர் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விற்பனைக்கு தேவையான பஞ்சி மெத்தை, கட்டில், டேபிள், சேர் போன்ற வீட்டு உபயோக பொருட்களை மாதவரம், பால்பண்ணை, பெரியசேக்காடு, பெருமாள் கோயில் தெருவில் ஜிபிசி கார்டனில் உள்ள குடோனில் சேமித்து வைத்துள்ளார். இவை, தேவைப்படும்போது குடோனில் இருந்து அனைத்து கடைகளுக்கும் எடுத்து செல்லப்படும்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த குடோனில் புகை வந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மாதவரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குடோனில் எளிதில் தீ பற்றக்கூடிய பஞ்சு, மரம் போன்றவைகளால் செய்யப்பட்ட பொருட்கள் என்பதால் குடோன் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. எனவே, தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், செங்குன்றம், செம்பியம், மணலி, அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் ஏற்பட்ட புகை மண்டலம்  அப்பகுதி முழுவதும் பரவியதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் தூங்க  முடியாமல் சிரமப்பட்டனர்.

Related Stories: