விசா பிரச்னையால் விமானத்தை தவறவிட்ட கவாஜா

புதுடெல்லி: இந்திய விசா பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா விமானத்தை தவறவிட நேர்ந்துள்ளது.இந்திய அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேற்று இந்தியா புறப்பட்டனர். தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுக்கான இந்திய விசா உறுதி செய்யப்படாததால், சக வீரர்களுடன் அவரால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. விசா பெறுவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக தான் விமானத்தை தவறவிட நேரிட்டது பற்றி கவாஜா செய்த ட்வீட் வைரலான நிலையில், அவர் இன்று இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில், ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட கவாஜா 56 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4162 ரன் (அதிகம் 195*, சராசரி 47.83, சதம் 13, அரை சதம் 19), 40 ஒருநாள் போட்டியில் 1554 ரன் (அதிகம் 104, சராசரி 42.00, சதம் 2, அரை சதம் 12) மற்றும் 9 டி20 போட்டியில் 241 ரன் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கான 4 நாள் பயிற்சி முகாம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. அதன் பிறகு அவர்கள் நாக்பூர் செல்ல உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர்கள் பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளே மோதும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: