புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  

            

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்                பி.கே.சேகர்பாபு இன்று (01.02.2023) சென்னை, புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான இராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம் கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் மற்றும் நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள், திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பழமையான திருக்கோயில்களில் ஒன்றான புரசைவாக்கம் கங்காதரேசுவர் கோயிலில் இராஜகோபுரம் மற்றும் பிற சன்னதிகளில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வர்ணம் பூசுதல், சுற்றுப் பிரகாரத்தில் கருங்கல் பதிக்கும் பணிகள், மேற்கூரையில் தட்டோடுகள் பதிக்கும் பணிகள், மின் மராமத்துப் பணிகள், நந்தவனம் சீரமைக்கும் பணிகள் மற்றும் காரிய கொட்டகை மண்டபம் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

இத்திருப்பணிகளை இன்று (01.02.2023) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அருள்மிகு பங்கஜம்மாள் உடனுறை கங்காதரேஸ்வரர் கோயிலில் 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றதை தொடர்ந்து ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் நிறைவுற்று இருப்பதால் இந்தாண்டு திருக்கோயில் குடமுழுக்கான திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சுமார் ரூ. 6 கோடி 30 லட்சம் மதிப்பீட்டில் தங்க தேர் இத்திருக்கோயிலுக்கு செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது. தங்கத் தேருக்கான மரத்தேரினை இத்திருக்கோயிலின் அறங்காவலர் கோபிநாத் ரூ.31 லட்சம் செலவில் உபயமாக செய்து தருகின்றார். அப்பணிகள் இன்னும் 2 மாத காலத்திற்குள் முடிவுறும். அதனை தொடர்ந்து, தங்கத்தேர் உருவாக்குகின்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை மாநகராட்சியின் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 1.30 கோடி  மதிப்பீட்டில் இத்திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் சுற்று பகுதிகளில் செல்லுகின்ற மழைநீர் குளத்திற்கு வந்து சேர்கின்ற வகையில் கட்டமைப்புகள் அமைக்கப்படுகின்றன.

இத்திருக்கோயின் இராஜகோபுரம், பிற சன்னதிகள் மராமத்து பணிகள், சுற்றுபிரகாரம் கருங்கல் பதிக்கும் பணி, நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்திட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து திருப்பணிகளை வேகப்படுத்தி இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு விழாவை  நடத்தி காட்டுவார்.  

இத்திருக்கோயில் திருப்பணிக்கு ஜம்பு ரூ.5 லட்சமும், ஓய்வு பெற்ற அரசு இணை செயலாளர் குணசேகரன் ரூ.1.04 லட்சமும் வழங்கி இருக்கின்றார்கள். இந்த ஆட்சி தான் இது போன்று உபயதாரர்கள் மனமுவந்து, நாம் கொடுக்கும் நன்கொடைகள் திருக்கோயிலின் திருப்பணிக்கு முழுமையாக செலவிடப்படும் என்ற நம்பிக்கையோடு வழங்கி வருகின்றனர். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரை இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.600 கோடியை திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.  

தைப்பூசத் திருவிழாவிற்கான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நாளில் திருக்கோயில்களில் பவனி வரும் திருத்தேர்களை முன்கூட்டியே ஆய்வு செய்து சிறப்பாக நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களுக்கு நாள்தோறும் 10,000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  கடந்த 20 மாதங்களில் 444 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. வரும் பிப்ரவரி 26ந் தேதிக்குள் 39 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் பணியாளர்களை பொறுத்தளவில் எந்தெந்த திருக்கோயில்களுக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுகுறித்து  முறையாக பத்திரிகையில் விளம்பரப்படுத்தி நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை  தேர்வு செய்து பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற  திட்டத்தின் கீழ் திருக்கோயில் அர்ச்சர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே.எஸ். இரவிச்சந்திரன், இணை ஆணையர் ந.தனபால், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பெ.வெற்றிக்குமார், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையர் எம். பாஸ்கரன், திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் சா.இராமராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: