நகை பறித்த 5 பேர் கைது எதிரொலி பஸ்களில் கேமரா பொருத்த நடவடிக்கை-போலீஸ் துணை கமிஷனர் தகவல்

கோவை :  கோவை டவுன் பஸ்களில் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படையை சேர்ந்த போலீசாருக்கு மாநகர் வடக்கு துணை கமிஷனர் சந்தீஸ் வாழ்த்து தெரிவித்து நேற்று பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

கோவை மாநகரில் கோயில் திருவிழா, ரயில் நிலையம், பஸ்களில் கூட்டத்தை பயன்படுத்தி பயணிகளிடம் நகை, பணம் திருடும் சம்பவத்தை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ், எஸ்ஐக்கள் சின்னதுரை, பிரபு, சிறப்பு எஸ்ஐக்கள் மாரிமுத்து, உமா மற்றும் தலைமை காவலர்கள் கார்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இத்தனிப்படையை சேர்ந்த போலீசார் பஸ்களில் பயணிகளுடன் பயணிகளாக சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த சுப்பையாவின் மனைவி பார்வதி (67), பார்வதியின் மகன்கள் திவாகர் (26), கண்ணையா (30) மற்றும் திவாகரின் மனைவிகள் முத்தம்மா (23), கீதா (24) என்பது தெரியவந்தது.

இந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் பஸ்களில் கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 40 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரையை சேர்ந்த இவர்கள் கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையத்தில் தங்கி இருந்து பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டவுன் பஸ்களை தேர்வு செய்து, அதில் பயணிகளோடு பயணிகளாக அமர்ந்து நகையை திருடி உள்ளனர். அதன்படி, பெரியக்கடை வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம் மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய போலீஸ் நிலையத்தில் பதிவான 13 வழக்குகளில் தொடர்புடைய 40 பவுன் நகை தற்போது மீட்கப்பட்டு உள்ளது. கைதான 5 பேரும் பல்வேறு பெயர்களில் உலா வந்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் பல பெயர்களில் ஏராளமான ஆதார் அட்டைகள் இருந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வேறு எங்கெல்லாம் வழக்குகள் இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை போல் இன்னும் சில கும்பல் மாநகர் பஸ்களில் சுற்றி வருகின்றனர். இவர்கள் பார்க்க பக்கத்து வீட்டார் போல் எளிமையாக தான் இருப்பர்.

அவர்களை பிடிக்கவும் தனிப்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் டவுன் பஸ்களில் கவனமுடன் பயணிக்க வேண்டும். மேலும், டவுன் பஸ்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிற்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: