ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் அமிர்தஜோதி தகவல்

சென்னை:  சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்த  மாணவர்களுக்கு பல்வேறு திறன்  அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை, மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும்  சிகை அலங்காரம்  பயிற்சி தாட்கோ மூலமாக அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர் பழங்குடியினத்தை சார்ந்த 10ம் வகுப்பு படித்த  18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும்  வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு  நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெறலாம். மேலும் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில்  உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை  044-25246344, 9445029456 ஆகிய எண்களில்   அணுகவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: