தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தனிஅறைகள் ஒதுக்கப்படும்: மேயர் வசந்தகுமாரி உறுதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும்போது, மாமன்ற உறுப்பினர்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மேயர் வசந்தகுமாரி உறுதியளித்தார். தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில், ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல தலைவர்கள் டி.காமராஜ், இ.ஜோசப் அண்ணாதுரை, எஸ்.இந்திரன், வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், கல்வி குழு தலைவர் கற்பகம் சுரேஷ், எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் பேசுகையில், \”மாமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்த மேயர், தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டத்திலேயே இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு கோரிக்கையாக வைத்துள்ளோம், அதிவிரைவில் அரசிடமிருந்து நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான யாக்கூப், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் தங்கள் கோரிக்கை குறித்து பேசினர். இதற்கு மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் பதிலளித்தனர்.

28வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு பேசுகையில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் குறைகளை கேட்க அலுவலகம் உள்ளதை போல தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கும் அலுவலகம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதை ஒட்டுமொத்த தீர்மானமாக கூட்டத்தில் நிறைவேற்றி தர வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த மேயர், தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும்போது, மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனித்தனியாக அலுவலக அறை ஒதுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிவடைந்ததும், மாநகராட்சி ஆணையராக இருந்து பணி மாற்றம் செய்யப்பட்ட இளங்கோவனுக்கு மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: