மண்எண்ணெய் ஊற்றி மனைவி எரித்து கொலை கணவனுக்கு ஆயுள் சிறை

சென்னை:  சென்னை தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகே உள்ள, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆட்டோ டிரைவரான ஜீவமணி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதேபகுதியில் கணவனை பிரிந்து 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்த லட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை மணமுடித்து இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்து 4 வயதான நிலையில், மற்றொரு பெண்ணுடன் ஜீவமணிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜீவமணியிடம், லட்சுமி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2019 அக்டோபர் 11ம் தேதி இரவு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஜீவமணி அருகில் இருந்த மண்எண்ணெயை லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவமணியை மறுநாள் கைது செய்து அவர் மீது கொலைக்கு காரணமாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பி.ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால்  ஜீவமணிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் தலா 4 ஆயிரம் ரூபாயை லட்சுமியின் இரு மகன்களுக்கும் வழங்க வேண்டும். அறியாத வயதில் தாயை இழந்த இருவருக்கும் தமிழக அரசிடமிருந்து கூடுதல் இழப்பீடு தொகையை பெற்று தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: