8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு எதிரொலி மெரினாவில் ஆயுதங்களுடன் மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி, 2 மாணவர்கள் கைது

சென்னை: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக, மெரினா கடற்கரையில் மாநில கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பாக 2 மாணவர்களை போலீசார் கைது ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி கல்லூரியில் படிக்கும், சுனில் என்ற மாணவனை சக மாணவர்களே அவர் இறந்ததாக போட்டோவை மார்பிங் செய்து, கல்லூரி மாணவர்கள் குரூப்பில் சுனில் படத்தை பதிவு செய்துள்ளனர்.

இதை பார்த்த மாணவர்கள் சிலர் சுனிலை பார்த்து கேலி செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த சுனில், தன்னை அவமானப்படுத்திய சக மாணவர்களை பழிவாங்க பல வழிகளில் முயற்சி செய்துள்ளார். அது அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையே சுனிலை நேற்று முன்தினம் பழைய புகைப்படத்தை வைத்து மீண்டும் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்க சுனில் முடிவு செய்துள்ளார். இதற்காக சுனில் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 20 பேருடன், புகைப்படத்தை மார்பிங் செய்து தன்னை அவமானப்படுத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி, நேற்று சுனில் நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள நேரு சிலை பின்புறம் ஆயுதங்களுடன் தயாராக இருந்துள்ளார். இதுகுறித்து தகவல்  எதிர்தரப்பு மாணவர்களுக்கு தெரியவந்ததும், அவர்களும் ஆயுதங்களுடன் காமராஜர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போது நேரு சிலை அருகே பதுங்கி இருந்த சுனில் மற்றும் நண்பர்கள் திடீரென ஆயுதங்களுடன் எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு தயாராக இருந்த எதிர்தரப்பும் சுனில் கும்பலை தாக்கி உள்ளது.

இந்த மோதல் சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் கடுமையாக ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில் 3 கல்லூரி மாணவர்களின் மண்டை உடைந்து ரத்த கொட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும் மோதலுக்கு காரணமான சுனில் மற்றும் தனுஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தப்பி ஓடிய சக மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மாணவர்களின் மோதல் சம்பவம் மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நேற்று இருதரப்பு மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மெரினா கடற்கரையில் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: