இந்தியாவின் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

வாஷிங்டன்: இந்தியாவின் பணவீக்க விகிதமானது நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார சூழ்நிலை குறித்த ஆய்வு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்தியாவின் பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி துறை பிரிவு தலைவர் டேனியல் லீ கூறுகையில், ‘‘மார்ச் 31ம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும் இந்தியாவின் பணவீக்க விகிதமானது, அடுத்து வரும் நிதியாண்டில் 5 சதவீதமாக குறையும். மேலும் 2024ம் ஆண்டில் இது 4 சதவீதமாக குறைவதற்கும் வாய்ப்புள்ளது. இது மத்திய வங்கியின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கிறது” என்றார்.

சுமார் 84 சதவீத நாடுகளில் கடந்த 2022ம் ஆண்டை காட்டிலும் 2023ம் ஆண்டில் பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும். 2022ம்  நிதியாண்டில் 8.8சதவீதமாக இருந்த  உலகளாவிய பணவீக்கம் 2023ம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2024ல் 4.3 சதவீதமாகவும் இருக்கக்கூடும். 2017-2019ம் ஆண்டில் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இது 3.5சதவீதமாக இருந்தது என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* பொருளாதார வளர்ச்சி சரியும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது சரிவடையக்கூடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மார்ச் 31ம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில் 6.8சதவீதமாக இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது அடுத்து வரும் நிதியாண்டில் 6.1 சதவீதமாக குறையலாம். இதேபோல் சர்வதேச பொருளாதாரமானது தற்போது இருக்கும் 3.4 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறையக்கூடும். 2024ம் ஆண்டில் இது 3.1சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: