இருள் விலகட்டும், இந்தியா விடியட்டும் எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும்: நினைவு நாளான 3ம் தேதி திமுகவினர் அமைதிப் பேரணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

* தமிழ்நாடு வாழ்க என்று மாநிலம் முழுவதும் முழக்கம் கேட்கிறது.

சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சி தந்த திராவிடத் தலைவராம் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள், பிப்ரவரி 3. 1969ம் ஆண்டு நம்மை கண்ணீர்க் கடலில் மிதக்கவிட்டு, வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொள்ளச் சென்றுவிட்டார் ‘தமிழ்நாட்டு’ முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா. உலகம் இதுவரை காணாத அளவில் 10 மில்லியன் மக்கள் பங்கேற்ற அவரது இறுதி ஊர்வலம், உலகச் சாதனையைப் பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் அச்சேறியது. நமது அன்னை நிலத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமகன். தாய்க்குப் பெயர் சூட்டிய பெருமை படைத்த தனயன்.  

கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஒரு சலூன் கடையில் என் இளம் வயதில் நான் தொடங்கிய போது, அதன் முதல் நிகழ்வு, முதன்மையான நிகழ்வு என்பதே பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தான். அவருடைய மணிவிழா பிறந்தநாளில் அண்ணா பங்கேற்றிட விரும்பி, அவரது இல்லம் சென்று அழைத்திட்டேன். உடல்நலன் குன்றியிருந்த நிலையில், சிகிச்சைக்காக அவர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பேரறிஞர் நம்மை விட்டுப் பிரிந்த நிலையில், திமுகவையும், ஆட்சியையும் தன் தோளில் சுமக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் கலைஞர். அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை இரவலாகப் பெற்றவர்.

இயக்கத்திற்கு இலக்கணமாக ஐம்பெரும் முழக்கங்களை வகுத்தளித்தவர். அதில் முதலாவது முழக்கம் தான், அண்ணா வழியில் அயராது உழைப்போம். எதற்காக அப்படி நடந்திட வேண்டும் என்பதையும் அடுத்தடுத்த முழக்கங்கள் வழியே விளக்கினார் கலைஞர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்று, அண்ணா வழியில் பயணித்து, நம்மையும் பயணிக்கச் செய்து, அண்ணாவின் எண்ணங்களைத் திட்டங்களாகவும் சட்டங்களாகவும் செயல் வடிவமாக்கியவர் கலைஞர். 60 வயதிற்குள் அண்ணா மறைந்தாலும், அவரது இதயம் அடுத்த அரை நூற்றாண்டு காலம் கலைஞரின் வடிவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3ம் நாளன்று, அண்ணா நினைவு நாள் அமைதிப் பேரணியை கலைஞர் தலைமையேற்று நடத்தினார். அலையலையாய் திமுகவினர் பின் தொடர, அண்ணா சதுக்கத்தில் மலர்வளையம் வைத்து புகழ்வணக்கம் செலுத்தி, அவர் வழியிலான அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். தன் அண்ணனுக்கு அளித்த உறுதிப்படி, அண்ணா துயிலும் இடம் தேடி, 2018 ஆகஸ்ட் 7ம் நாள் நிரந்தரமாகப் பயணித்த கலைஞர், இரவலாகப் பெற்ற அண்ணாவின் இதயத்தைத் திருப்பி அளித்துவிட்டு, அருகிலேயே ஓய்வு கொண்டு வருகிறார். 14 வயதில் தொடங்கிய அவரது பொதுவாழ்வுப் பயணம் 94 வயதில் தான் ஓய்வைக் கண்டது.

திமுகவினரான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் ஓய்வில்லை. கலைஞர் வழங்கிய முழக்கத்தின் படி, அண்ணா வழியில் அயராது நடந்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியின் பயன்கள் கிடைத்திட அயராது உழைத்திடுவோம்.உங்களில் ஒருவனான நான் முதல்வர் என்ற பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். என் தலைமையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தின் இலச்சினையில் ‘தமிழ்நாடு அரசு’ என்றும், ‘வாய்மையே வெல்லும்’ என்றும் பொறிக்கப் பெற்றிருக்கிறது என்றால், அந்தப் பெயரைச் சூட்டி, அந்த வாசகத்தை இடம் பெறச் செய்த பெருமை அண்ணாவுக்கே உரியது.

‘தமிழ்நாடு வாழ்க’ என்று மாநிலம் முழுவதும் முழக்கம் கேட்கிறது. அதற்கு மாற்றான குரல்கள், அனைத்துத் தரப்பு மக்களின் கடும் எதிர்ப்புக்குள்ளாகி, தம்மை மாற்றிக் கொள்ளும் நல்லதொரு நிலையை நாடு காண்கிறது. அண்ணா, என்றும் நம் மனதில் வாழ்கிறார். இன்றும் இந்த மண்ணை ஆள்கிறார். வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் அண்ணாவின் சதுக்கத்தில் அணையா விளக்கை ஏற்றியவர் கலைஞர். அந்த இருபெரும் தலைவர்களும் ஏற்றிய லட்சியச் சுடர் என்றென்றும் ஒளி வீசிக் கொண்டே இருக்கும்.

அந்த லட்சியச் சுடரைக் கைகளில் ஏந்துவோம். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டையும், பன்முகத்தன்மையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காக்கும் நல்லரசு ஒன்று அமைந்திட திராவிட லட்சியச் சுடர் தேவைப்படுகிறது. எத்திசையும் அண்ணா எனும் பேரொளி பரவட்டும். இருள் விலகட்டும். இந்தியா விடியட்டும். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3 அன்று திமுகவினர் திரளாகப் பங்கேற்கும் அமைதிப் பேரணி, அதற்கான தொடக்கமாக அமையட்டும்.

Related Stories: