நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: ஓபிசி வகுப்புக்கான உள்இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஆணையம் கால நீட்டிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிபதி ரோகிணி ஆணையம் கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஆணையம் அதன் பணிகளை முடித்து பரிந்துரைகளை இறுதி செய்த நிலையில் அது கேட்காமல் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 13 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டும் கூட இன்று வரைக்கும் ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

அனைத்து பணிகளையும் திட்டமிட்டவாறு முடித்துவிட்ட ஆணையம் இறுதி அறிக்கையை கடந்த ஜூலையிலேயே தயாரித்தது. 27 சதவீதம் இடஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூகங்களின் எதிர்ப்பை சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஒன்றிய அரசு காலதாமதம் செய்கிறது. எனவே நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக பெற்று அதன் பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். நீதிபதி ரோகிணி ஆணையம் 2017ம் ஆண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி அமைக்கப்பட்டது.

அடுத்த 3 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் அடுத்தடுத்து 13 முறை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட போதிலும், இன்று வரை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எந்தவித நியாயமான காரணங்களும் இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Related Stories: