வியாசர்பாடி பகுதியில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மரணம்: போலீசார் விசாரணை

பெரம்பூர்: வியாசர்பாடியில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் திடீரென மரணமடைந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கார்த்திக் (27). இவர், கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாசர்பாடி பகுதியில் உள்ள சாலையோர ஓட்டலில், கார்த்திக் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளார்.

இரவு 11 மணியளவில் கார்த்திக் மட்டும் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததால், உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடல்நிலை மோசமாக உள்ளது எனக்கூறி, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.இந்த, சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் கார்த்திக் உயிரிழப்புக்காண முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தில் உள்ள அனைவரும் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கிய நிலையில், கார்த்திக் நேற்று முன்தினம் இரவு பரோட்டா சாப்பிட்டு விட்டு, ஜூஸ் ஒன்றை குடித்தது தெரியவந்தது. அதன் காரணமாக இறந்தாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: