வாடிக்கையாளர்கள் போல் நடித்து மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன், பணம் பறிப்பு: மர்ம கும்பலுக்கு வலை

பூந்தமல்லி: பூந்தமல்லியில் வாடிக்கையாளர்கள் போல் வந்து, மசாஜ் சென்டர் ஊழியர்களிடம் 4 சவரன், 5 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில், தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு குமார் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் .

நேற்று முன்தினம் மாலை இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்கள் போல் 5 பேர் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மேனேஜரிடமிருந்து 4 சவரன், பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், வாடிக்கையாளர்களின் விலை உயர்ந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மேனேஜர் மற்றும் ஊழியர்கள் இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் செல்போன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: