போலீசார் இரவு நேர ரோந்து பணியால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தது: பயணிகள் வரவேற்பு

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக 24 மணி நேரமும் இந்த பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படும். மேலும் பஸ் கிடைக்காதவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பினரும் இரவு நேரத்தில் இந்த பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம்.

இவர்களை குறிவைத்து மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரவுடிகளும் ரகளை செய்து வந்தனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் மது குடித்துவிட்டு மதுபாட்டிகளை அங்கேயே போட்டு உடைப்பது, பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போன்றவற்றால் வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். இப்பிரச்னைக்கு தீர்வாக, சி.எம்.டி.ஏ செயற் பொறியாளர் ராஜன்பாபு தலைமையில் ஒரு குழுவினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுடன் கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசாரும் கடந்த 11 நாட்களுக்கு மேலாக இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பேருந்து நிலையத்தில் தூங்கிய வெளியாட்களை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து 11 நாட்களாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் வழிப்பறி, செல்போன், செயின் பறிப்பு, பிக்பாக்கெட், ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா போதை கும்பல் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த ரோந்து பணியில் ஈடுபடுவோம்,’’ என்றனர். பயணிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசாரின் இரவு ரோந்து பணியால் குற்றச் சம்பவங்கள் குறைந்து உள்ளது. இரவு நேரங்களில் பேருந்து நிலையம் சுத்தமாக உள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக போலீசாருக்கும், சிஎம்டிஏ அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். போலீசார், இரவு ரோந்து பணியை தொடர வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: