மாநகர பஸ் கண்ணாடி உடைத்த 5 பேர் கைது

தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து, கடந்த 27ம் தேதி மணலி நோக்கி  மாநகர பேருந்து (தடம் எண்:56டி) புறப்பட்டது. அப்போது, பேருந்தில் ஏறிய 5 பேர், படிக்கட்டில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டதால், அவர்களை நடத்துனர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காசிமேடு எஸ்என் செட்டி தெரு புதுமனைக்குப்பம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி, கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து நடத்துனர் ரஜினி (42), டிரைவர் சுரேஷ் (46) ஆகியோர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், திருவொற்றியூர் ராஜாஜி நகரை சேர்ந்த திலீப்குமார் (20), கார்கில் வெற்றி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (22), அரசு (20), ராயபுரம் புது காமராஜ் நகரை சேர்ந்த சேதுராமன் (21), மணலி தில்லைபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (19) ஆகிய 5 பேர் பஸ் கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: