திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதன்முறையாக கமல் பங்கேற்பு: பிப். 2வது வாரம் ஈரோட்டில் பிரமாண்ட பொதுக்கூட்டம்

* தலைவராக பொறுப்பேற்ற பின்பு பிரசாரத்துக்கு வரும் மல்லிகார்ஜூன கார்கே

* கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவனை எதிர்த்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. டிடிவி.தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.   

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் 11 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுகவின் இரு அணிகளும் 116 பேர் கொண்ட குழு, 118 பேர் கொண்ட தேர்தல் குழுவை களமிறக்கி உள்ளன. இத்தேர்தலில் பாஜ மட்டும் இதுவரை தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில் அதிமுகவின் எந்த அணியை ஆதரிப்பது என்கிற அறிவிப்பையும் பாஜ வெளியிடவில்லை. ஆனால் அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் சிறு கட்சிகள், பாஜ போட்டியிட்டால் ஆதரவு தெரிவிப்போம் என்றும் அறிவித்துள்ளன.

 இத்தகைய எதிர்க்கட்சிகளின் குழப்பங்களுக்கு மத்தியில் திமுக கூட்டணி பிரசாரம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரத்துக்கு வருகிறார். மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுவதால் அவருக்கு ஆதரவு கேட்டு பிரசாரத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய தலைவரான பின்பு இன்னும் மல்லிகார்ஜூன கார்கே தமிழகம் வரவில்லை. எனவே, பிரசாரத்தை முன்னிலைப்படுத்தி கார்கே பிரசாரத்துக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கும் என்பதால் அவரது வருகையை பிரமாண்டப்படுத்த காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். எனவே கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட பிரசார பொதுக் கூட்டத்தை நடத்த திமுக கூட்டணி சார்பில் திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், பிப்ரவரி 2வது வாரம் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தசரன், கே.பாலகிருஷ்ணன், காதர் மொகிதீன், வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுடன் புதிய வரவாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தின் மூலம், முதன்முறையாக அரசியல் மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related Stories: