சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை: 2வது இடத்திற்கு சபலென்கா முன்னேற்றம்.! ஆடவரில் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரைபகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில், 5வது இடத்தில் இருந்து 3 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் தக்க வைத்துள்ளார்.

துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் ஒரு இடம் பின்தங்கி 3வது இடத்தையும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4, பிரான்சின் கரோலின் கார்சியா 5, அமெரிக்காவின் கோகா காப் 6, கிரீசின் மரியா சக்கரி 7, ரஷ்யாவின் டாரியா கசட்கினா 8, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆஸி. ஓபன் பைனலில் தோல்வி அடைந்த எலினா, 15 இடங்கள் முன்னேறி 10வது இடத்தில் உள்ளார். இதேபோல் ஆண்கள் தரவரிசையில் ஆஸி, ஓபனில் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிச் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், கிரீசின் சிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளனர். ஸ்பெயின் ரபேல் நடால் 4 இடம் சரிந்து 6வது இடத்தில் உள்ளார்.

Related Stories: