லாரி மீது சொகுசு பஸ் மோதி பெண் உள்பட 2 பேர் பலி: 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நள்ளிரவில் மாடு ஏற்றி சென்ற லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பெண் உட்பட இரண்டு பயணிகள் பலியானார்கள். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து நேற்று இரவு கேரள மாநிலத்திற்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் லாரியும், பேருந்தும் கடுமையாக சேதமடைந்தன. இதில் பேருந்தில் சென்ற சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆண்டனிதாசன் (58), கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த கமலாபாய் (64) ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பேருந்தை ஓட்டிச் சென்ற தவமணி மற்றும் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சென்னை-திருச்சி நான்கு வழி சாலையில் நடைபெற்றதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: