கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதி சரணாலயங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் கோடியக்கரை, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், தொண்டியக்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதியில் தீவிர பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கானக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணி நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சுரேஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவுக் கொண்ட காடாகும். இங்கு ஆண்டு தோறும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகை அரிய பறவைகள் வருகிறது.அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. வருடத்தில் நவம்பர் துவங்கி பிப்ரவரி வரையிலும் இங்கு பறவைகள் வரத்து அதிகமிருக்கும். இந்நிலையில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்த இருப்பதாக வனத்துறை அறிவித்து இருந்தது.

முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி மற்றும் வனத்துறையினர்களுடன் பறவைகள் ஆராய்ச்சியாளர் பிஎன்ஹெச்எஸ் இயக்குநர் பாலசந்திரன் தலைமையிலான 10குழுக்களாக பிரிந்து மொத்தம் 50பேர் கொண்ட குழுவினர் கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் நேற்று பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று முதல் நாள் பணியாக ஒரு குழு முத்துப்பேட்டை அலையாத்திகாட்டிற்கு கோரையாற்றில் படகு மூலம் சென்று அங்குள்ள சேத்துகுடா, யாழ்ப்பாணதான் சேரி, மனக்கட்டை, உப்பு தோட்ட்டம், ஜல்லி முனை வெட்டாறு, கடல் முகத்துவாரம் ஆகிய பகுதிகளிலும் அதேபோல் தொண்டியகாடு பகுதியில் உள்ள வளவனாறு, ஓஎன்ஜிசி பகுதிகளிலும், அதேபோல் கோபாலசமுத்திரம் வயல்வெளி, மங்கலூர் ஏரி, கிழக்கு கடற்கரை சாலை மருதங்காவெளி குட்டைகள், துறைக்காடு, மரவாக்காடு, வடக்காடு, கரிக்காடு ஆகிய வனப்பகுதிகள், பரக்கலக்கோட்டை அமிரி குளம் ஆகிய பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை பகுதி கல்லூரி உதவி பேராசிரியர்கள் மற்றும் இதில் முதல் நாள் நேற்று நடந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் முடிவில் தான் பறவைகள் எண்ணிக்கை தெரியவரும்.

Related Stories: