2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்

சென்னை: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, வேலை அளிப்பவர் பங்காக ரூ.40 என மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குதொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 31ம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்திற்கும் மிகாமல் ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய, கொடுக்கப்படாத தொகைகள் ஏதும் இருப்பின் அதனை ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கீடு செய்யப்பட்டு தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த, வேலை அளிப்பவர்கள் கடமைப்பட்டவராவார். எனவே, 2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதி தொகையை வரும் 31ம் தேதிக்குள் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: