3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்வருக்கு, ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கஞ்சா வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு, அதிகபட்சம் 20 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் சில வழக்குகளில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் பெறும் நிலை உள்ளது. ஐகோர்ட் கிளையின் எல்லையில் தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரையில் போதைப்பொருள் தடுப்பு குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன. 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பள்ளி, கல்லூரி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுத்து சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடும் வகையில், போதைப்பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என  தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்திலேயே கூறியுள்ளார்.

இந்த நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசின் சார்பில் உரிய நடவடிக்கையும், தேவையான சுற்றறிக்கையும் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் வழக்குகளில் உடனடியாக வழக்குப் பதிவதோடு மட்டுமின்றி, குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, பறிமுதல் பொருட்களை பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பறிமுதல் பொருட்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள்(மல்கனாஸ்) சென்னை, திருச்சி, மதுரை, தேனி மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு சாவி முறை பின்பற்றப்படுகிறது. இதற்கென பொறுப்பில் உயரதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 4 சரகங்கள் மற்றும் சென்னையில் போதைப் பொருள் ஒழிப்பு குழுவும் டிஐஜிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன.

10 நாட்களுக்குள் ஆய்வு முடிவுகள் கிடைத்திடும் வகையில் தடயவியல் ஆய்வகங்களில் 2 ஆய்வக நுட்புநர் மற்றும் அறிவியல் அலுவலர் இருப்பதை உறுதி செய்யவும் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அந்தந்த பகுதிக்குள் 100 கிமீ தூர சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்குமான தூரம் குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் போலீசால் வழக்கை சரியாக தொடர முடியும். போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தலாம். இதுதொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளது. டிஜிபியின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: