உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினி பெயர், குரலை பயன்படுத்தினால் நடவடிக்கை: வழக்கு பாயும் என வக்கீல் எச்சரிக்கை

சென்னை: ‘வணிக நோக்கத்திற்காக உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக உள்ளார். அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் ‘சூப்பர்ஸ்டார்’ என புகழ்ந்து வருகின்றனர். திரையுலகில் அவருக்கு உள்ள ரசிகர் பட்டாளமும், மரியாதையும் அளவிட முடியாதது. எனவே மிகவும் பிரபலமாக உள்ளவர் என்பதால் நடிகர் ரஜினிகாந்த்தின் புகழ், ஆளுமை, பிரபலத்திற்கு அவருக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது.

பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் தயாரிப்பு உற்பத்தியாளர்கள் வர்த்தக ரீதியாக நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரம், கலைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய புகைப்படம் மற்றும் பிற குணாதிசயங்களை தவறாகப் பயன்படுத்துவதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. சில பொருட்களை, தயாரிப்புகளை பொதுமக்களை வாங்கச் செய்வதற்காகவும் பொதுமக்களை கவர்ந்திழுக்கவும் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், குணாதிசயங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும் வகையில் உள்ளது. எனவே, உரிய அனுமதியின்றி நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், குரல், புகைப்படம் உள்ளிட்டவற்றை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தினால், உரிமைகளை மீறும் அத்தகைய நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: