கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு சென்னை ஐஐடியில் ஜன.31ம் தேதி ஜி20 கருத்தரங்கம்: கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து விவாதம்

சென்னை: ஐஐடியில் ஜனவரி 31ம் தேதி கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும், ஜி20 கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்று இருக்கிறது. இந்த நிலையில் ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு கல்லூரி மாணவர்கள், ஐ.ஐ.டி. மாணவர்கள், பேராசிரியர்கள் என 900 பேர் பங்கேற்கும், கல்வி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னை ஐ.ஐ.டி.யில் 31ம் தேதி முதல் பிப்., 2ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வியில் ஒவ்வொரு நாடுகளின் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், நடைமுறைகள், கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், பாடத்திட்டங்கள், நடைமுறைகள், திறன் மேம்பாடு குறித்து பேச விவாதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றி பார்க்கிறார்கள். பின்னர் தமிழ்நாட்டின் கலாசார நிகழ்வுகள் நடக்கிறது.

கருத்தரங்கத்தில் பேசப்பட்ட கருத்துகள் குறித்து அதற்கு அடுத்த 2 நாட்கள் கல்வி பணிகள் குழு ஆலோசித்து, அதை விவாதிக்கும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். மேலும், வருகிற 1 மற்றும் 2ம் தேதிகளில் உறுப்பு நாடுகளின் ஆராய்ச்சி, புதுமையான கண்டுபிடிப்பு, திறன் சார்ந்த அம்சங்களுடன் கூடிய கண்காட்சி அரங்குகள் இடம்பெற உள்ளன. இதனை அனைவரும் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:அனைத்து நாடுகளில் இடைநிற்றல் என்பது இருக்கிறது. நமது நாட்டில் 15 வயது முதல் 25 வயதுடையவர்கள் 13 கோடி பேர் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக ஆக்க என்ன நடவடிக்கைகளை வேண்டும் என்பது போன்ற தகவல்கள் கருத்தரங்கில் எதிரொலிக்கும். கருத்தரங்கில் ஜி20 உறுப்பு நாடுகள்(20 நாடுகள்) மற்றும் 9 நட்புறவு நாடுகள் என மொத்தம் 29 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கருத்தரங்கில் பேசப்படும் அனைத்து கருத்துகளையும் சேர்த்து ஒரு கொள்கையாக கொண்டு வரமுடியுமா என்று பேச உள்ளோம். கொரோனா காலத்தில், கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகளவில் இருந்தது. அதன்பின்னரும், அதன் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. இதுபற்றியும் இந்த கருத்தரங்கில் பேச இருக்கிறார்கள் என்றார்.அப்போது மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத், துணை செயலாளர் ஷாலியா ஷா, ஜி20 கல்வி பிரிவின் தலைவர் சைதன்யா பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: