மருத்துவ சிகிச்சைக்காக சகோதரருடன் விமானத்தில் வந்த அசாம் மாநில வாலிபர் உயிரிழப்பு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: அசாம் மாநிலத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக, சகோதரருடன் விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பயணி திடீரென உயிரிழந்ததால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலம், கவுகாத்தியிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 134 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் வந்த கவுகாத்தியை சேர்ந்த சஜீத்அலி (46), திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். அவருடன் வந்த சகோதரர் ராஜேஷ் அலி, விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார்.

உடனடியாக பணிப்பெண்கள், விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, பயணிக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், விமானம் தரை இறங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்படி, இரவு 9.40 மணிக்கு தரை இறங்க வேண்டிய விமானம், 20 நிமிடம் முன்னதாக 9.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி, பயணி சஜித் அலியை பரிசோதனை செய்தததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிறகு விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சஜித்அலி கல்லீரல் பாதிக்கப்பட்டு அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற விமானத்தில் தனது சகோதரர் ராஜேஷ் அலியுடன் வந்தபோது, திடீரென உடல்நிலை மோசமாகி உயிரிழந்தது தெரியவந்தது.

இதற்கிடையே வழக்கமாக, இந்த விமானம் இரவு 9.40 மணிக்கு கவுகாத்தியிலிருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் இரவு 10.15 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்லும். ஆனால், பயணி ஒருவர் உயிரிழந்து விட்டதால், விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு, விமானத்தை இயக்க முடியும் என்று விமானி கூறிவிட்டார். தொடர்ந்து விமான ஊழியர்கள், விமானத்தை முழுமையாக ரசாயன கலவைகள் மூலம் ஸ்பிரே செய்து சுத்தப்படுத்தினர். பிறகு 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையிலிருந்து 106  பயணிகளுடன் விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

Related Stories: