பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை

சென்னை: பாடியநல்லூர் சோதனை சாவடியில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 17.5 டன் ரேஷன் அரிசியை, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபியாக அருண் பதவி ஏற்றதும், மாநிலம் முழுவதும் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ரேசன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். எல்லைகளில் தீவிர சோதனை நடத்தவும், உளவு தகவல்கள் மூலம் கடத்தல் அரிசியை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்கிறவர்களையும் கண்டறிந்து கைது செய்யவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சென்னையில் எஸ்பி கீதா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிஎன்-05 சிபி-8715 என்ற  வாகனம், போலீசாரை பார்த்ததும் தூரத்தில் நிறுத்தப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் இறங்கி ஓட முயன்றார். போலீசார் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவரிடம் நடத்திய  விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த முகமது காஜா மைதீன் (37) என தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்ததில் தலா 50 கிலோ கொண்ட 60 மூட்டைகளில்  3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, வாகன உரிமையாளர் தவுலத் நிஷா மற்றும் வாகன ஓட்டுநர் முகமது காஜா மைதீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முகமது காஜா மைதீன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான உரிமையாளர் தவுலத் நிஷாவை தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, அவ்வழியே வந்த டிஎன்.05 சிஎப் 6941 என்ற பதிவெண் கொண்ட வேனை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் தலா 50 கிலோ கொண்ட 60 மூட்டைகளில் 3,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் உரிமையாளர் தவுலத் நிஷா, வாகன ஓட்டுநர்  நூர் ஆலம், யாகூப் ஷெரிப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிப்பட்ட வாகன ஓட்டுநர்  நூர் ஆலம் மற்றும் யாகூப் ஷெரிப் ஆகியோரை கைது செய்தனர். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 6 டன் ரேஷன் அரிசியையும் 2 வாகனங்கள் மூலம் கடத்தலில் ஈடுபட்ட உரிமையாளர் தவுலத் நிஷா என்பவரை தேடி வருகின்றனர். 2 சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி, திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல, இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் நேற்று, காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டை ரோட்டுத்தெருவில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மினி லாரியில் 26 கிலோ எடைகொண்ட 440 மூட்டைகளில் மொத்தம் 11.44 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மினிலாரி மற்றும் கிடங்கிலிருந்த 11.5 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட பார்த்தசாரதி (32), உதயகுமார் (37), ராஜதுரை (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல மாநிலம் முழுவதும் கடத்தல் ரேஷன் அரிசியை பிடிக்க சிவில் சப்ளை சிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை தொடரும் என்று சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்தனர். ரேஷன் பொருட்கள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்கிறவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்.

Related Stories: