அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் பிப்.3ல் அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவிப்பு

சென்னை: அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 3ம் அமைதி பேரணி நடைபெறும் என்று சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் அறிவித்துள்ளனர். சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், த.இளைய அருணா, மாதவரம் எஸ்.சுதர்சனம் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சி தந்த காவியத் தலைவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தந்தவர், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்த, தென்னகத்தின் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளினையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். திமுக இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய அனைத்து அணியினரும் அண்ணா நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வர வேண்டும் என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: