தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் குரூப் 3ஏ தேர்வை 98,807 பேர் எழுதினர்: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழ்நாடு அரசின் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர் நியமிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 14 கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், ஒரு தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடத்துக்கு தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டது. கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடத்துக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.75,900 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும்.  முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்ச மதிப்பெண்கள் 60. 2ம்  பகுதி பொது அறிவு. இதில் 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இந்த பணியிடங்களுக்கான தேர்வு, தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மொத்தம் 334 மையங்களில் நேற்று தேர்வு நடைபெற்றது. 98,807 பேர் நேற்று தேர்வு எழுதினர். சென்னையில் 37 மையங்களில் நடைப்பெற்ற தேர்வில் 10,841 பேர் தேர்வு எழுதினர்.

Related Stories: