கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா

கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது அதிகரித்து உள்ளது.

தற்போது குளிர்க்காலம் என்பதால், வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் மலைப்பகுதிகளில் உள்ள சிறு,சிறு அருவிகளில் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி சாலைகளில் உலா வருகிறது. மேலும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள பிரதான சாலையில் குஞ்சப்பனை அருகே காட்டு யானை ஒன்று சாலையில் உலா வந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரம் சாலையில் உலா வந்த காட்டு யானை அங்கும் இங்குமாக சென்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அச்சத்துடன் வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி சென்றனர். எனவே, இதுபோன்று பகல் நேரங்களில் சாலைகளில் உலா வரும் காட்டு யானையை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: