கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தில் பெண் கவுன்சிலர், அவரது மகனை கத்தி முனையில் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24-ம் தேதி வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா, மகன் ஜேக்கப் ஆகியோர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் உட்பட 4 பேரை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தின் முதலாவது வார்டு கவுன்சிலர் ரோஜா. இவர் கடந்த 24-ம் தேதி பல்லவாடா கிராமத்தில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், ரோஜாவையும், அவரது மகன் ஜேக்கப்பையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவர்களது காரிலேயே கடத்திச் சென்றுள்ளனர்.

தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். கடத்தப்பட்டவர்களை தேட 4 தனிப்படைகளையும் அமைத்து உத்தரவிட்டார். இதனிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் ரோஜா கடத்தப்பட்ட காரை சிலர் பார்த்துள்ளனர். அவர்களை ஆந்திர காவல்துறையினர் பின்தொடர்ந்த நிலையில், ரோஜாவையும், அவரது மகனையும் காளஹஸ்தி அருகே கீழே இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர்.

இருவரையும் மீட்ட இரு மாநில காவல்துறையினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகனை கடத்தியதாக தெரியவந்தது. இதனை அடுத்து சுரேந்தர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: