கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எஸ்பி முரளி ரம்பா உட்பட 48 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

ஊட்டி: ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்பி முரளிரம்பா உட்பட 48 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், தீபு, வாளையார் மனோஜ், சதீசன், ஜித்தின் ஜாய், சந்தோஸ்சாமி ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் கூடுதல் எஸ்பி முருகவேல், டிஎஸ்பிக்கள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். சிபிசிஐடி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து தகவல் கேட்டு பெற வேண்டியுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டு கொண்டனர். இதனை ஏற்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கு மாவட்ட நீதிபதி முருகன் ஒத்திவைத்தார்.

இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், ‘‘வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும். மின்னணு தடயங்கள் தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்து விவரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது. இதனை ஏற்று வழக்கை பிப்ரவரி 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்’’ என்றார்.

அரசு வழக்கறிஞர் கனகராஜ் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதிதாக 48 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். முக்கியமாக கொடநாடு சம்பவம் நடைபெற்றபோது நீலகிரி மாவட்ட எஸ்பியாக இருந்த முரளி ரம்பாவிற்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கூடுதல் தகவல்களை பெறும் நோக்கில் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. பழைய விசாரணை ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்’’ என்றார்.

Related Stories: