74வது குடியரசு தினவிழா அரசு அலுவலகங்களில் கொண்டாட்டம்: சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிப்பு

சென்னை: நாட்டின் 74 குடியரசு தினம் அரசு அலுவலகங்களில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நாட்டின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகத்திலும் குடியரசு தினவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உயர் அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி தேசிய கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

பல்வேறு அரசு துறைகள் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற பாலம் கல்யாண சுந்தரத்திற்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வருமான வரித்துறை அலுவலகத்தில் தலைமை முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த 18 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மீ.தங்கவேல், வாரிய செயலாளர் துர்கா மூர்த்தி, தலைமை பொறியாளர் ச.சுந்தரமூர்த்தி, உதவி செயலாளர் (நிர்வாகம்) ரா.தனலட்சுமி மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கே.விவேகானந்தன், முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) கே.வரதராஜன், முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அலுவலர் கோ.ஜெய்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோயம்பேட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில், வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். உடன் மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ், வாரிய செயலாளர் சரவணமூர்த்தி, நிதி ஆலோசகர் கோவிந்தராஜ், அயலக தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் புகழ்காந்தி, கண்ணன், பன்னீர்செல்வம், பர்கத் பேகம் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் ஆர்.பிரியா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ‘கண்ணுக்கு காட்சி அறிவுக்கு மீட்சி’ என்ற தலைப்பில் மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றது. விழாவில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் தனசேகரன், விசுவநாதன், சாந்தகுமாரி, ஜெயதாஸ், நரேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தெற்கு ரயில்வே சார்பில் நடந்த குடியரசு தின விழாவில் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, ரயில்வே பாதுகாப்பு படையினர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசாரின் கராத்தே, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சென்னை கோட்ட மேலாளர் ஸ்ரீகணேஷ்வி, கே.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் பல்லவன் இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ், பரிசுகள் வழங்கினார்.

சென்னை துறைமுகம் சார்பில் தண்டையார்பேட்டையில் நடந்த குடியரசு தினவிழாவில் துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடி ஏற்றினார். சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் முதன்மை செயலாளர் சித்திக் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதில் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுணன், பிரசன்ன குமார், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் டாக்டர் ஜெயந்தி, அரசு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டீன் டாக்டர் சாந்தி மலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயக்குநர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் மணி ஆகியோர் தேசிய கொடியேற்றி மரியாதை செய்தனர். இதில் டாக்டர்கள், ெசவிலியர்கள், பேராசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரும்பாக்கம் அண்ணா அரசு சித்த மருத்துவமனையில் மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் ஞானமணி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராதிகா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது டாக்டர்கள் மல்லிகா, ரவிச்செல்வன், ஷீரின்பேகம், டபேதார் ஆறுமுகம் மற்றும் செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு வளாகத்தில் நிர்வாக இயக்குநர் அரவிந்த்குமார், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் துறை பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். ஊழியர்களுக்கு நீண்ட கால சேவைக்கான நினைவு பரிசுகளை வழங்கினார். நிறுவன அதிகாரிகள் ராஜிவ் ஐலவாடி, எஸ்.கிருஷ்ணன், எச்.சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். இதேப்போல், சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: