காரைக்கால் அருகே பயங்கரம் குழந்தை, பாட்டியை கொன்று இளம்பெண் தற்கொலை முயற்சி: தாய், தந்தை, 2 சகோதரர்களுக்கும் வெட்டு

காரைக்கால்: காரைக்காலில் தனது 4 மாத குழந்தையையும், பாட்டியையும் மண்வெட்டியால் கொன்ற பெண், தனது தாய், தந்தை, 2 சகோதரர்களையும் வெட்டினார். பின்னர், அவர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மாவட்டம்  அக்கரைவட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்கா  லட்சுமி (35). இந்நிலையில் துர்காலட்சுமி பிரசவத்துக்காக,  காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர், மேலப்படுகை பகுதியில் உள்ள தனது தாய்  வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். அவருக்கு 4 மாதங்களுக்கு முன் பெண்  குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல்  வீட்டில் துர்காலட்சுமி, தனது நான்கு மாத பெண் குழந்தை தனுஸ்ரீ,  தந்தை பரமசிவம் (75), தாய் தமிழரசி (65), அண்ணன்கள்  ஆண்டவர்(45), நடராஜன் (40) பாட்டி வேதவல்லி (85) ஆகிய அனைவரும் படுத்து  தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் துர்கா லட்சுமி,  வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து தூங்கி கொண்டிருந்த அனைவரையும் சரமாரியாக வெட்ட துவங்கினார். இதில் குழந்தை தனுஸ்ரீ ரத்த  வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில்  நடராஜன் காயங்களுடன் தட்டு தடுமாறி வீட்டை விட்டு வெளியில் வந்து, அருகில்  வசிப்போரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

இதற்கிடையே, துர்கா லட்சுமி தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு  தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் துர்காலட்சுமி உள்பட 6 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேதவல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துர்காலட்சுமி உயிருக்கு ஆபத்தான  நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: