மூணாறு அருகே 70 லிட்டர் போலி மதுபானம் கடத்த முயற்சி: டாஸ்மாக் ஊழியர் உள்பட 4 பேர் கைது

மூணாறு: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள பூப்பாறையில் 70 லிட்டர் போலி மதுபானம் கடத்த முயன்ற டாஸ்மாக் ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பூப்பாறை மற்றும் சாந்தன்பாறை ஆகிய பகுதிகளில் போலி மதுபானம் விற்பனை குறித்து  காவல்துறை மற்றும் கலால்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சாந்தன்பாறை காவல் ஆய்வாளர் மனோஜ்குமார் தலைமையில் போலீசார் பூப்பாறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர்.

அப்போது ஜீப்பில் 70 லிட்டர் போலி மதுபானம் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ஜீப்பில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, திருவனந்தபுரம் நகரைச் சேர்ந்த பினு (50), பூப்பாறை டாஸ்மாக் கடை ஊழியர், பூதத்தான்கட்டு பகுதியை சேர்ந்த பிஜூ (40), இடுக்கி கஞ்சிக்குழி பகுதியைச் சேர்ந்த பினு (53) ஆகியோர் என்பது தெரிந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப்பை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான 4 பேரும் டாஸ்மாக் கடையில் இருந்து காலி மதுபாட்டில்களை எடுத்து வந்து, அதில் போலி மதுவை நிரப்பி விற்பனை செய்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு வரும் சில வாடிக்கையாளர்களிடம் ரூ.440 மதிப்புள்ள மதுபானத்தை, ரூ.300க்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்றனர்.

Related Stories: