மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு புத்தாடைகள், சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2021 - 22ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின் போது,  “மணமக்களில் ஒருவர்  மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்காண பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்”  என அறிவிக்கப்பட்டது.

மேலும் சம்மந்தப்பட்ட திருக்கோயில்  சார்பில் மணமக்களுக்கு புத்தாடைகளும், திருக்கோயில் பிரசாதமும் வழங்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (26.01.2023) சென்னை, சைதாப்பேட்டை, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற 2 மாற்றுத்திறனாளி இணைகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு திருக்கோயில் சார்பில் புத்தாடைகள், கைகடிகாரங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 84 இணை மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணங்கள் திருக்கோயில்களில் நடைபெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் கே.ரேணுகாதேவி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் பி. செம்ம சந்திரன், திருக்கோயில் செயல் அலுவலர் ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: