நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி அணிக்கு செக் வைக்க அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியை தூண்டிவிட்ட பாஜக..!

* அரசியல் குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் தவிப்பு

* வேடிக்கை பார்க்கும் அண்ணாமலை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு செக் வைப்பதற்காக அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியை தூண்டி விட்டு தேர்தல் களத்தில் யாரும் வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் அரசியல் குழப்பத்தை பாஜக செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரச்னைகளை சரி செய்யாமல் அண்ணாமலை வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். திமுகவில் தேர்தல் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டு அவர்களும் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.

அதேநேரத்தில் மேற்கு மண்டலம் என்பதால் எடப்பாடி அணி வேட்பாளரை தேர்வு செய்தது. முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை வேட்பாளராக்க முடிவு செய்யப்பட்டு அவரும் சம்மதித்திருந்தார். ஆனால், கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட தமாகா போட்டியிட சீட் கேட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக பேசியதால் வாசன் போட்டியில் இருந்து விலகினார். ஆனால் அவரிடம் வேட்பாளரை நிறுத்தும்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டார். ஆனால் பாஜக, அதிமுகவுக்கு இடையிலான ஈகோ மோதலில் நாம் பலிகடா ஆகக் கூடாது என்பதால் வேட்பாளரை நிறுத்த விருப்பமில்லை என்று வாசன் கூறிவிட்டார்.

இந்தநிலையில் பாஜக போட்டியிட வேண்டும் என்று சில கட்சிகளும், அக்கட்சியின் தொண்டர்களும் வலியுறுத்தினர். அண்ணாமலையும் தனது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருந்தார். ஆனால், மேலிடமோ வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கூறிவிட்டது. இதனால் அதிமுகவை ஆதரிக்க முடிவு செய்திருந்தார்.

அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருக்கும் தகவல் அண்ணாமலைக்கு தெரியவந்தது. இதனால் பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட அண்ணாமலை, வேட்பாளரை நிறுத்துங்கள். உங்களுக்குத்தான் இரட்டை இலை கிடைக்கும். இல்லாவிட்டால் இருவருக்குமே கிடைக்காது.

அதிமுக முடக்கப்படும். அப்போதுதான் உங்களை எடப்பாடி தேடி வருவார் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால்தான் வேட்பாளரை நிறுத்த பன்னீர்செல்வம் முடிவு செய்தார். அவருக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு ஆடிட்டரும் ஆதரவு தெரிவித்தார். இதனால் அவர் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். பன்னீர்செல்வத்துக்கு பெரிய அளவில் ஆதரவு மேற்கு மண்டலத்தில் இல்லை. ஆனால் அந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூக வேட்பாளர் ஒருவரை நிறுத்த பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதனால் பன்னீர்செல்வம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ, அதன்பின்னர் நாம் வேட்பாளரை அறிவிக்கலாம் என்று எடப்பாடி முடிவு செய்துள்ளார்.

அதேநேரத்தில் எடப்பாடி அணியில் வேட்பாளராக நிற்க முடிவு செய்திருந்த கே.வி.ராமலிங்கம், இரட்ைட இலை கிடைக்காது என்பதால் போட்டியிட மறுத்து விட்டார். செலவு செய்த பணமும் வீணாகிவிடும், டெபாசிட்டும் கிடைக்காது, என்று பயந்து ஒதுங்கிவிட்டார். இதனால் வேட்பாளர் கிடைக்காமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார். அதேநேரத்தில் எந்த கவலையும் இல்லாமல் பன்னீர்செல்வம் உள்ளார். பன்னீர்செல்வத்தை தூண்டிவிட்டு பாஜக வேடிக்கை பார்ப்பதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதனால்தான் அதிமுகவில் எந்த அணிக்கும் ஆதரவு தராமல் பாஜக நடுநிலை வகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: