நாளை பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக விழா: இன்று பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கியது. 22ம் தேதி மாலை 8 கால வேள்விகளில் முதற்கால யாக வேள்வி துவங்கியது. இதற்காக பாரவேல் மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.

இரவு - பகலாக யாக வேள்விகள், ஓதுவார் பாராயணங்கள் நடைபெற்றன. நேற்று 4ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து முற்றோதல், விநாயகர் வழிபாடு நடந்தது. தொடர்ந்து தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள் உள்பட 96 வகையான பொருட்கள் யாகத்தில் போடப்பட்டது. நேற்றிரவு வரை சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது.

இன்று பாதவிநாயகர், சேத்ரபாலர், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுதசுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நாளை மலைக்கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Related Stories: