சவுகார்பேட்டையில் 14 கிலோ தங்கத்துடன் இருவர் பிடிபட்டனர்

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். சவுகார்பேட்டை பகுதியில் யானைகவுனி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து செல்லும் போது ஆதியப்பன் தெருவில் சந்தேகப்படும்படி இரண்டு வாலிபர்கள் நடந்து சென்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களுடைய பையை சோதனையிட்டதில் 14 கிலோ தங்க வளையல், மோதிரம், வாட்ச், செயின்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.6 கோடி.

பிறகு, காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த முகேஷ் பவரிலால்  ஜெயின் (49), சிக்கந்தர் (39) என்பதும், இவர்கள் மும்பையில் இருந்து நகைகளை வாங்கி வந்து எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகை கடையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.

இதுதொடர்னான புகாரின்படி, யானைகவுனி ஆய்வாளர்கள் புஷ்பராஜ். சுரேஷ்குமார் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மும்பையைச் சேர்ந்த இரண்டு பேரையும் அவர்கள் கொண்டு வந்த 14 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: