இரவில் ஊருக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தும் காட்டு யானையை பிடிக்காவிட்டால் போராட்டம்: தேவர்சோலை கிராம மக்கள் எச்சரிக்கை

கூடலூர்: தேவர்சோலை பகுதியில் இரவில் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானையை ஓரிரு நாட்களில பிடிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் தேவர்சோலை, மூலச்செறுமுள்ளி, கோழிக்கண்டி, தேவன் இரண்டு, குற்றிமுச்சு , மன்வயல் உள்ளிட்ட குக்கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் பகுதிகளில் பகல் நேரத்தில் முகாமிட்டு இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நடமாடுகிறது.

இந்த யானை நிரந்தரமாக இப்பகுதிக்கு வருவதை தடுக்க அதனை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சேவ் தி பீப்பள் அமைப்பு சார்பில் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து கடந்த 20ம் தேதி கூடலூர் ஆர்டிஓ விடம் மனு அளித்தனர். நேற்று மாலை ஏடிஎஸ்பி சீனிவாசன், ஆர்டிஓ குதிரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ், மற்றும் உதவி வன பாதுகாவலர் கருப்பையா மற்றும் வனச்சரகர்கள் ஆகியோர் கொட்டாய் மட்டம் பகுதிக்கு மக்களிடம் பேச்சுவார்த்தைக்காக வந்திருந்தனர். மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம் காரம் நேரில் வராததற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு ஊருக்குள் வரும் யானையை விரட்டுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என வனத்துறையினர் கூறுகின்றனர். இப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பொதுமக்கள் தொழிலாளர்கள் என அனைவரும் ஆறு மணிக்கு மேல் வீடுகளுக்குள் முடங்கி விட வேண்டிய சூழல் உள்ளது. நாளை 25ம்தேதி இந்த யானையை இங்கிருந்து பிடித்துச் செல்ல வேண்டும். அதுவரை மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது.

மேலும் கிராமங்களை ஒட்டிய வன எல்லைகளில் அகழி, மின்வேலி அமைத்து வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நாளில் யானையைப் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எழுத்து மூலமாகவும் கிராம மக்கள் சார்பில் அதிகாரியிடம் கடிதம் அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது 50க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள், ஊழியர்கள் யானையை ஊருக்குள் வராமல் தடுப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களுக்குள் யானையைப் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதியும் பெற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் தரப்பில் சேவ் த பீப்பிள் அமைப்பு சார்பில் எல்ஜூ, ரேகா, வேலாயுதன், அஞ்சுகுண்ணு கிராம பாதுகாப்பு குழு சார்பில் கோபி, சாஜி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகேஷ், ஜோஸ் மற்றும் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

Related Stories: