பள்ளி, கல்லூரி மாணவர்களின் சூழியல் ஆய்வுக்களமாகும் மணக்குடி அலையாத்தி காடுகள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆறுகள் கடலோடு கடலக்கும் பொழிமுகப்பகுதிகள் பல உள்ளன. பழையாறு கடலுடன் கலக்கும் மணக்குடி, பன்றிவாய்க்கால் கலக்கின்ற ராஜாக்கமங்கலம், வள்ளியாறு கலக்கும் கடியப்பட்டணம், பாம்பூரி வாய்க்கால் சென்று சேரும் குளச்சல், தாமிரபரணி சென்றடையும் தேங்காப்பட்டணம் ஆகியவை இந்த பொழிமுகங்கள் ஆகும். இவற்றில் பல்லுயிர் பன்மய இனப்பெருக்கத்திற்கு உரிய சூழல்கள் நிறைந்த பகுதியாக மணக்குடி விளங்குகிறது. பழையாறு கடலுடன் கலக்கின்ற சதுப்பு நிலப்பகுதியும் நன்னீர் மற்றும் கடல் நீரோட்டமும் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

இங்கு அலையாத்தி காடுகள் வகையை சேர்ந்த சுரப்புன்னை, கண்டல் போன்ற தாவர வகைகள் வளர அனைத்து சூழியல் தன்மைகளும் உள்ளன. இங்கு 1990ம் ஆண்டு அலையாத்தி காடுகள் உருவாக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அலையாத்தி காடு இது ஆகும். ஹீல் நிறுவன ஆலோசகர் மறைந்த டாக்டர் சந்தானகுமார் முயற்சியால் இந்த பணிகள் அப்போது நடைபெற்றது. இன்று அலையாத்தி காடுகள் பல்கி பெருகி பறவைகள், மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களுக்கு வாழிடமாகவும், இனப்பெருக்க மண்டலமாகவும் மாறியுள்ளது.

 

அலையாத்தி காடுகளின் அனைத்து வகை மரங்களிலும் உள்ள இலைகள் தண்ணீரில் விழுந்த பிறகு நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. சதுப்பு நிலங்களில், நண்டுகள் வாழ இடுகின்ற துளைகள், பூமி அதிகம் காற்றை பெற்று சுரப்புன்னை மரங்கள் வாழ உதவி புரிகிறது. இந்த பகுதிகள் பறவைகள், வவ்வால், பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் தளமாகவும், அவற்றின் கழிவுகள் மீன்களுக்கு உணவாகவும், தாவரங்களுக்கு உரமாகவும் உள்ளது.

வரிமீன், பால்மீன், இறால் உள்ளிட்டவை இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது. சேத்து நண்டு, பிடில் நண்டு போன்றவை இங்கு அதிகம் காணப்படுகிறது. வண்ணநாரை, கடல் காகம், வவ்வால் மற்றும் சில வாத்து இனங்கள் அலையாத்தி காடுகளுக்கு உரிய பறவை இனங்கள் ஆகும். உப்புநீர், நன்னீர் ஆமைகளின் வாழ்விடமாகவும், இனப்பெருக்க இடமாகவும் உள்ளதால் நல்ல பருவ நிலை சூழியல் காலங்களில் அரியவகை வெளிநாட்டு பறவை இனங்களும் இங்கு வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு இந்த இடத்தை கழிமுக பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் என்று 2012ம் ஆண்டு அறிவித்தது.

பருவ காலங்களில், இங்கு வரும் வெளிநாட்டு பறவைகளை கண்டு மகிழவும், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பறவைகளை உற்றுநோக்கிட, காட்சி கோபுரம் பழையாற்றின் மேற்கு கரை ஓரம் அமைக்கப்பட்டுள்ளது. மணக்குடி பொழிமுக அலையாத்தி காடுகள் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் ஆய்வுக்களமாக மாறியுள்ளன. அலையாத்தி காடுகள், பல்லுயிர் பெருக்கம் தொடர்பாக ஆய்வு செய்கின்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் இந்த பகுதிக்கு வருகை தருகின்றனர். இப்பகுதியில் அரசு சார்பில் படகு சேவைகள் ஏற்படுத்தும் தருவாயில் இந்த பகுதிகளில் சுற்றுலா பயண திட்டம் மேலும் மேம்படும்.

இந்தநிலையில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆற்றூர்  என்.வி.கே.எஸ்.டி கல்வியியல் கல்லூரி 60ம் ஆண்டையொட்டி 4 நாட்கள் குடிமை  பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள் மணக்குடி பொழிமுக பகுதிக்கு வருகை தந்தனர். குடிமை பயிற்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி, வாழ்க்ைக திறன் கருத்தரங்கு, பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாணவிகள், பேராசிரியர்கள் 4 படகுகளில் மணக்குடி பொழிமுக  அலையாத்தி காடுகள் பகுதியில் வருகை தந்தனர்.

அவர்கள் அங்கு சுரப்புன்னை மரக்கன்றுகள் நட்டனர். மேலும் அங்கு அலையாத்தி காடுகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும்  நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். சூழியல் ஆர்வலர் சிலுவை வஸ்தியான், அலையாத்தி காடுகளின் தன்மைகள், அது உருவான விதம், நன்மைகள் தொடர்பாக மாணவிகளுக்கு விளக்கினார்.

கல்லூரி  செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் லதா, முகாம்  ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் கிரீஷ்குமார், கண்ணன், வித்யா மற்றும் பழனியாபிள்ளை,  ஆசிரியர்கள் உடன் பங்கேற்றனர்.மேலும் மணக்குடி மீனவ கிராம பகுதியில் மீனவ மக்களின் வாழ்க்கை முறைகள் தொடர்பாகவும் மாணவிகள் ஆய்வு மேற்கொண்டனர். அருகேயுள்ள பெரியகாடு கடற்கரை மணல் திட்டுகள்  தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு நடத்தினர்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாகும்

ஹீல் தொண்டு நிறுவன இயக்குநர் சிலுவை வஸ்தியான் மாணவியரிடம் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் அனைத்து வகை சுற்றுலா தலங்கள் இருந்தாலும் காயல் நீர்வழியில் சுமார் 2 மணி நேரம் பயணிக்கும் இயற்கை நீர் வழி சுற்றுலா மணக்குடி காயல்பகுதி மட்டுமே. மேலை நாட்டு பல வகை அரிய பறவைகள், பசுமையான அரிய மரங்களான தாழை மற்றும் புன்னை மரங்களின் ரம்யமான பூவாசனை மனச்சோர்வை போக்கும். இப்பகுதியில் பல்லுயிர் பெருக்கம் குறித்த ஆய்வில் பிடில் நண்டு இனப்பெருக்கம் செய்துள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கரைகளின் இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரத்தின் அடர்த்தியான வளர்ச்சி கழிமுக சூழல் அமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கழிமுகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவது தண்ணீரை மாசுபடுத்துகிறது, மீன்வளத்தையும் குறைக்கிறது. தென்னை நார் கழிவுகளும் கால்வாயில் கலந்து வருவதால் அதில் உள்ள ஹைட்ரஜன் சல்பேட் செறிவு நீரில் உள்ள ஆக்சிஜனை குறைக்கிறது. இதுவும் மீன்வளம் குறைய காரணமாக உள்ளது. தென்னை நார் நச்சுநீரின் வீரியத்தை குறைக்க புல்படுக்கை முறையை கையாள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களில் மீதமுள்ள இடங்களில் அலையாத்தி காடுகளை உருவாக்கினால் எதிர்காலத்தில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இடம்பெயரும் பறவைகள் வரவும், இனப்பெருக்கம் செய்யவும் வாழ்விடமாக இருக்கும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாகும் என்பதால் சுற்றுலா மூலம் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். இதற்காக அலையாத்தி காடுகள் பெருக்கத்திற்கு சுரப்புன்னை கன்றுகள் நடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: