நம் வழி தனிவழியாக இருக்க வேண்டும்: தேனியில் எடப்பாடி பேச்சு

தேனி: ‘நம் வழி தனிவழியாக இருக்க வேண்டும்’ என தேனியில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமராஜ் மற்றும் கூடலூர் நகர அதிமுக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாவை நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். இதற்காக  நேற்று காலை தேனி மாவட்டத்திற்கு வந்தார். ஒற்றைத்தலைமை பிரச்னை ஏற்பட்ட பிறகு முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தேனி அருகே மதுராபுரியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரவேற்புக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘தேனி மாவட்டமே குலுங்குகின்ற வகையில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளதற்கு நன்றி. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை  நாம் எல்லோரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். அதுவே மறைந்த தலைவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். எவ்வளவோ பேர் எங்கேயோ இருக்கிறார்கள். அவர்களை பற்றி கவலை இல்லை. நம்முடைய வழி, தனி வழியாக இருக்க வேண்டும். நேர்மையான வழியாக இருக்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவு, மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். தமிழகம் மேம்பட வேண்டும். ஏழைகள் என்ற சொல் இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும். அதற்காக வாழ்ந்து, மறைந்த ஒப்பற்ற தலைவர்கள் வழியில் நாம் நின்று மிகச்சிறப்பாக, எழுச்சியாக எதிர்காலத்தை நோக்கி செல்வோம்’’ என்று கூறினார்.

Related Stories: