சமூகவலைதள வாசிகளே உஷார்... யூடியூப்பில் வீட்டு ரகசியத்தை சொன்னதால் கொள்ளை முயற்சி: புதுச்சேரியில் இருந்து கோவைக்கு திருட வந்த ஏ.சி. மெக்கானிக் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஹைல். இவர் 2 யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கோவை கேஜி சாவடி பிச்சனூர் பகுதியில் சுஹைல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றை கட்டினார். இதுதொடர்பான வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு, வீட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து அதில் பேசி இருந்தார். வீட்டின் அறைகள், உள்ளே என்னென்ன இருக்கின்றன என்பது தொடர்பாக விலாவாரியாக அவர் விவரித்த அந்த வீடியோ காட்சிகளை ஏராளமானோர் பார்த்து லைக் செய்துள்ளனர்.

அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அனுராம் (25) என்பவரும் சுஹைலின் வீடியோவை பார்த்துள்ளார். சுஹைலின் வீட்டை பார்த்த அவருக்கு அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்கும் திட்டம் உருவானது. பின்னர் கோவையில் உள்ள சுஹைல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி அனுராம் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார். நள்ளிரவு நேரத்தில் அனுராம் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று யாருக்கும் தெரியாமல் அங்கு பதுங்கி இருந்தார்.

காலை 6 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்தார். அங்கு சுஹைல் இருந்ததை பார்த்ததும் அனுராம் கத்தியை காட்டி அவரை மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த சுஹைல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அனுராமை கையும் களவுமாக பிடித்தார். இது தொடர்பாக கே.ஜி. சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அனுராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தையும், கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்து பிடிபட்டதையும் சுஹைல்  வீடியோவாக்கி அதையும் தனது சேனலில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

Related Stories: