திடீர் மின்தடை; இருளில் மூழ்கியது பாகிஸ்தான்: போக்குவரத்து நிறுத்தம்; மக்கள் தவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கின. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், குவெட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ரயில்கள்  பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் அன்றாடம் அலுவலகம் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும்பாலான நகரங்களில் மக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகினர்.

இதனிடையே, மேம்பாலத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் இருந்து பயணிகள் இறங்கி நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது குறித்து அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் குர்ரம் தஸ்தகிர் கூறுகையில், ``குளிர்கால இரவில் மின் தேவையின் அளவு குறைந்ததால் ஜெனரேட்டர்கள் இயங்குவது நிறுத்தப்பட்டது. பின்னர் காலையில் மீண்டும் இயக்கிய போது, தாது-ஜாம்ஷோரோ இடையிலான பகுதியில் சீரற்ற மின் அழுத்தம் காணப்பட்டதால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. ,’’ என்று தெரிவித்தார்.

ஆனால், பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் பாகிஸ்தான் மக்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவை கழித்தனர். இதனிடையே, பெஷாவர் மற்றும் இஸ்லாமாபாத் மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறும் பெரும்பாலான துணை நிலையங்களுக்கு மின் விநியோகம் தொடங்கபட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் தஸ்தகிர் கூறியுள்ளார்.

Related Stories: